பா ... லாஜிக் (அ) புத்தி!
மிகுந்த யோசனைக்குப் பின் தான் இப்பதிவை எழுத முடிவு செய்தேன். காஞ்சி பிலிம்ஸ் அவர்களின் பதிவில் இடப்பட்ட பின்னூட்டங்கள் மற்றும் ரோசா எழுதிய பதிவு குறித்தும் சுய விளக்கமாக சில வெளிப்படையான கருத்துக்களை, நிதானத்துடன் முன் வைக்கிறேன்.
தாஸ் திருமா குறித்து சொன்னதை, அவர் தலித் என்பதால் அப்படி கூறப்பட்டது என்பதாக நான் முதலில் அவதானிக்கவில்லை. அதை தனி மனிதரை குறித்த ஒரு வசையாகவே எண்ணினேன் (தாஸ¤ம் அப்படித் தான் விளக்கம் அளித்திருந்தார்). அதற்கு கண்டனம் தெரிவிப்பது அல்லது தெரிவிக்காமல் இருப்பது என்ற முடிவை எடுப்பது என் சுதந்திரம் என்றபோதிலும், அது கூறப்பட்ட சூழலின் தீவிரத்தை உணராமல், தாஸ் சொன்னதை ஆமோதித்து நான் எழுதியது நிச்சயமாக தவறு தான், திருமா தற்போது பாட்டாளித் தலைவருடன் இணைந்து நடத்துவதை சந்தர்ப்பவாத அரசியல் என்று நான் நினைத்தாலும் கூட. ஆனால், ரோசா வீசிய சூடான மறுமொழியால், விவாதம் வேறு பாதையில் சென்று விட்டது! என் மறுமொழியும் சற்று கடுமையான தொனியில் அமைந்ததாகவே உணர்கிறேன். இவையனைத்திற்கும், வருத்தமும், யாரையும் நோகடித்திருந்தால், மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
தனியொரு மனிதனின் செயலுக்கு அல்லது தவறுக்கு, சாதிக்குறியீட்டை சுட்டிக் காட்டி 'பாப்பார' புத்தி அல்லது லாஜிக் என்றழைப்பது சரியான அணுகுமுறை அல்ல. (சுஜாதா பார்ப்பனர் என்பதால் ஆதரிக்கிறேன், ஆனால் திருமாவை திட்டுவதை வரவேற்கிறேன் என்பதை மேற்கூறிய லாஜிக் என்று கூறவும் / எதிர்கொள்ளவும் முடியவே முடியாது). இதனால், ஒரு சாதியினர் அனைவரும் தலித்துக்களுக்கு எதிரானவர்கள் என்று சித்தரிப்பதற்கு ஒப்பானதாகி விடுகிறது. இந்த/எந்த காலகட்டத்திலும் இது உண்மையல்ல. காலமும் மாறிக் கொண்டு தான் இருக்கிறது! மேலும், இது நிஜமான நல்லெண்ணம் கொண்டவரையும் திசை திருப்பி விடும் அபாயம் நிறைந்தது என்று நினைக்கிறேன்.
ரோசா, பல சமயங்களில், தன் கருத்துக்களை வசைச் சொற்களுடன் சேர்த்து வழங்கும் (என் அளவில் தவறான!) அணுகுமுறையை அவர் சார்ந்த சாதி (என்ன என்பது முக்கியமில்லை) சம்மந்தப்பட்ட செயல் (அவர் பாணியில் "லாஜிக்"!) என்று அப்பட்டமாக நிராகரிப்பது மடத்தனமான அல்லது தவறான வாதம் ஆகாதா? அதை ரோசாவின் எதிர் கொள்ளும் முறை என்று தானே அவதானிக்க வேண்டும். வசைகளை விடுத்து அவர் கூறும் கருத்துக்களுடன் ஒத்துப் போவதையோ அல்லது எதிர்ப்பதையோ செய்து கொண்டு தானே இருக்கிறோம்!
எல்லா சாதியினரிலும், சாதி வெறியர்களும் இருக்கிறார்கள், எல்லாரையும் சமமாகக் கருதுபவர்களும், மனிதநேயத்தை போற்றுபவரும் உள்ளார்கள் என்ற அடிப்படைக் கருத்தை மதிப்பவரிடம் / ஒப்புக் கொள்பவரிடம் தான் பேச அல்லது விவாதிக்க முடியும். இவர் இந்த சாதியை சேர்ந்ததால், இப்படித் தான் பேசுவார் / நடப்பார் என்று எண்ணும் பட்சத்தில் என்ன செய்ய முடியும்? விவாதங்கள் திசை திரும்பி வார்த்தைகள் தடித்து, அவை சண்டையில் முடியக் கூடிய சாத்தியங்களே அதிகம்! அதனால் பயன் எதுவும் இல்லை, தேவையற்றதும் கூட.
காஞ்சி பிலிம்ஸ் நண்பருக்கும், தாஸ¤க்கும், எனக்கும் கண்டனம் (சரியானது தான்!) தெரிவித்த பலரும், ரோசா குறிப்பிட்ட ... லாஜிக் பற்றி வாய் திறக்கவில்லை (கணேசனைத் தவிர, அனாமதேயங்களை கண்டு கொள்ளத் தேவையில்லை). குறைந்த பட்சமாக, 'இப்படிக் கூறுவது விவாதத்திற்கு உகந்ததல்ல' என்று கூட வலியுறுத்தாதது சற்று மன அயற்சியை அளிக்கிறது. என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே இதை எழுதினேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் நிச்சயமாக இல்லை. அது போலவே, இப்பதிவின் பின்னூட்டக் களத்தில் ஒரு சூடான விவாதத்தில் இறங்குவதில் எனக்கு விருப்பமும் இல்லை. நன்றி!
என்றென்றும் அன்புடன்
பாலா
3 மறுமொழிகள்:
உங்கள் நிதானமான பதிலுக்கு நன்றி! ஏறகனவே பலமுறை என் தரப்பை முன்வைத்துவிட்டேன். என் கருத்தில் மாற்றமில்லையெனினும், அது நிச்சயம் எனக்கு உள்ள ஒரு கருத்தே அன்றி, அது உங்களை புண்படுத்தும் நோக்கதுடன் சொன்னது கிடையாது, என்பது எனக்கும் என்னை புரிந்துகொள்ளும் நண்பர்களுக்கும் தெரியும். என்னிடம் நட்பு பாரட்டிய உங்களிடம் இப்படி சொல்ல நேர்ந்தது எனக்கு வருத்தமானது என்று மட்டும் சொல்லி கொள்கிறேன்.
எல்லாவற்றிலும் தேவையற்றுப் பார்ப்பனர்களை இழுப்பதே சிலருக்கு வேலையாகிப் போயிற்று. திண்ணியத்தில் தலித்களை மலம் உண்ணச் செய்தவர்களின் ஜாதியை எழுத யாருக்கும் துணிவு இல்லை. தலித்துகளிலேயே வெவ்வேறுத் தளங்களில் வாழ்பவர்களிலும் அடக்கு முறை உள்ளது. அம்பேத்கர் சிலைக்கு அவமதிப்பு செய்பவர்கள் என்ன ஜாதி? வன்னியர்கள் செய்யாத அடக்கு முறைகளா? எல்லாவற்றையும் விட்டு விட்டுப் பார்ப்பன வாலி என்று மட்டும் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ரோசா,
//என் வார்த்தைகளையும் கருத்துக்களையும் நீங்கள் ஒப்புகொள்ளவில்லை யெனினும், முதலில் தாஸ் சொன்னதை நியாயப்படுத்த முனைந்த நீங்கள், பின்னர் மனம் மாறி உங்கள் கருத்து உட்பட அனைத்தையும் கண்டிப்பதை ஒப்புகொண்டீர்கள்.//
நியாயப்படுத்த முனைந்தது, சூழலின் தீவிரத்தை உணராததால் ஏற்பட்ட தவறு என்று தெளிவாக சொல்லி விட்டேனே!
//சொன்ன தருணத்தில் என்னிடம் இருந்த நியாயத்தை குறைந்த பட்சம் கூட நீங்கள் உணரவில்லை. கூப்பாடு பல போட்டபின் முழுவதும் இல்லையெனினும், ஓரளவு ஒப்புகொண்டு எழுதினீர்கள்//
(சொன்ன தருணத்தில்) சொன்ன விதம் (என் தவறுக்கு, அந்த "லாஜிக்கை" என்னால் ஏற்க முடியவில்லை!) என்னை திசை திருப்பி விட்டதால் தான் உடனடி தெளிவு பிறக்கவில்லை. சொன்ன விதம் சரியாக அமைந்திருந்தால் கூப்பாடு பல இல்லாமலேயே பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கலாம் (ஒரு வேளை!) இல்லையா?
//எப்படியிருப்பினும் உங்களை புண்படுத்துவது எனக்கு நோக்கம் இல்லையென்பதால் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். அடுத்த பாட்டு போட்டியில் சந்திக்கலாம். //
கனிவுக்கு நன்றி! பாட்டுப் போட்டி சிறிது நேரத்தில் தொடங்கும்!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment